சென்னை நகரில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் பெருகிவிட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுத்திட்டமாக சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சைக்கிளில் பயணம் செய்வது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமின்றி எரிபொருள் சிக்கனமும் ஏற்படும் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிந்தவுடன் செயல்படுத்த ஆலோசனை குழு நியமிக்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக 3000 முதல் 3,500 சைக்கிள்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், ஒரு இடத்துக்கு 10 முதல் 15 சைக்கிள் வீதம் 150 முதல் 170 இடங்களில் மாநகராட்சி சார்பில் வாடகை சைக்கிள் நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஆயிரம் விளக்கு, எழும்பூர், மயிலாப்பூர், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அருகில் வாடகை சைக்கிள் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வு மற்றும் திட்ட மதிப்பீட்டு பணிகளுக்காக ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கலாம், பொதுமக்கள் சிரமமின்றி சைக்கிள்களை ஓட்டிச்செல்ல பாதைகள் அமைத்து கொடுத்தல், நிதி வசதியை ஏற்படுத்துவது பற்றி விரிவான திட்ட அறிக்கையை சமர்பிப்பார்கள். அதன்பிறகு சைக்கிள் நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். வாடகை சைக்கிள்களை பயன்படுத்துவதன் மூலம் வாகன புகையில் நகரம் மாசுபடுவது குறைவதோடு விபத்துகள் குறையும். உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமையும் என்பதால் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

English Summary : Chennai Corporation plans to open Bicycle rental station with 3000 to 3500 cycles after R.K.Nagar by-election.