தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதியே மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்சார வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆதார் எண்களை இணைத்து கொடுத்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பலனாக நேற்று வரை 2 கோடியே 64 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு உள்ளதால் அதற்குள் ஆதார் எண்ணை இணைக்குமாறு விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது.

இதுபற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், 3 கட்டமாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதால் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். இன்னும் 15-ந்தேதி வரை அவகாசம் உள்ளதால் அனைவரும் இணைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என்று தெரிவித்தார். ஆதாரை இணைக்காவிட்டால் 15-ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரை இணைக்காதவர்களின் வீடுகளை கண்டறிந்து மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்றும் நினைவுப்படுத்தி ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *