2012ம் ஆண்டு ‘ஹிக்ஸ் போசோன்’ (Higgs Boson) என்னும் அடிப்படைத் துகள் இருப்பதற்கான ஆதாரத்தை, முதன்முதலாகச் சுவிஸ் நாட்டின் சேர்ன் நகரில் (Cern) அமைக்கப்பட்டிருக்கும், துகள் மோதி (Large Hadron Collider) மூலமாகக் கண்டுபிடித்தனர். இந்தச் செய்தி அந்தச் சமயத்தில் உலகமெங்கும் பரவலாகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்தது. உலகம் முழுவதுமே அப்போது ஹிக்ஸ் போஸோனின் வசம் ஈர்க்கப்பட்டதற்குக் காரணம், அதனற்கான செல்லப் பெயர்தான். ஹிக்ஸ் போஸோனுக்குக் ‘கடவுள் துகள்’ (God Particle) என்ற செல்லப் பெயர் கொடுக்கப்பட்டு, அதைத் தேடிக்கொண்டிருந்த வேளையில்தான் அது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், கடவுள் துகளைக் கண்டுபிடித்து விட்டோமென்றே உலகளாவிய ரீதியில் செய்திகள் பரவின. கடவுளையே கண்டுவிட்டார்களாம் என்றுகூடச் சிலரால் அது விமர்சிக்கப்பட்டதும் நடந்தது. ‘கடவுள் துகள்’ என்னும் பெயரால் உலகத்தை அதிர வைத்த அந்தத் துகளுக்கான நிஜப் பெயரில் இருபெரும் இயற்பியலாளர்கள் இணைந்திருக்கிறது. அதில் ஒருவர் இந்தியரும்கூட.

ஹிக்ஸ் போஸோன் துகளை 50 ஆண்டுகளுக்கு முன்னரே வெளிப்படுத்திய ‘பீட்டர் ஹிக்ஸ்’ என்பவரின் நினைவாக ஹிக்ஸ் என்றும், அது போஸோன் வகைத் துகள் என்பதால், ‘போஸோன்’ என்பதும் இணைந்திருக்கிறது. இதில் இந்திய இயற்பியலாளரான, ‘போஸ்’ என்பவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் போஸோன் எனப்பெயரிடப்பட்டது. 2012ம் ஆண்டு ஹிக்ஸ் போஸானின் இருப்பு உறுதி செய்யப்பட்டாலும், துகள்களின் அடிப்படை அட்டவணையில் (Standard Model) அதை இணைத்து மகிழ்விக்கும் அளவுக்கான ஆதாரங்கள் இதுவரை நமக்குக் கிடைத்திருக்கவில்லை என்பதே உண்மை. சேர்ன் துகள் மோதியின் ஆற்றலின் அளவுக் குறைபாடுகூட இதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஆனால், கடந்த வருடம் துகள் மோதியின் ஆற்றல் பல மடங்காக அதிகரிக்கும் வகையில், மீள் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின்னர், மீண்டும் சமீபத்தில் உயர் ஆற்றலுடன் துகள் மொதி இயக்கப்பட்டது. அதன் பயனாகவே இரண்டு நாட்களுக்கு முன்னர், ஹிக்ஸ் போஸானின் இருப்புத் தெளிவான வகையில் அவதானிக்கப்பட்டது. இரண்டு கீழ்க் குவார்க்குகளிலிருந்து (Down Quark) ஹிக்ஸ் பொஸோன் சிதைவடைந்து செல்வதைத் தெளிவாகக் கணித்துள்ளார்கள். இதன்படி ஹிக்ஸ் போஸான் நூறு சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், துகள்களின் அடிப்படை அட்டவணையில் இதைப் பொருத்திவிடும் சாத்தியமும் உருவாகியுள்ளது.

பிரபஞ்சத்தின் மிகமிகமிக ஆரம்பக் கணத்தின், தோற்ற வடிவமைப்பை இப்போது துல்லியமாகப் புரிந்துகொள்ளும் நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். சொல்லப் போனால் கடவுளின் கணத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

By, ராஜ் சிவா (முகநூல் பதிவு )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *