சென்னை: தமிழகத்தின் திருவாரூர், சேலம், புதுக்கோட்டை, கடலூர், நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும், புதுவை யூனியன் பிரதேசத்துக்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் திருவாரூர், நாகை, நாகூர்,கொரடாச்சேரி, மாங்குடி, கங்களாஞ்சேரி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக இன்றைய தினம் திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து இதர பணிகளை மேற்கொள்ள ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்திருந்த நிலையில் தற்போது முழுவதுமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.