சென்னை: ”அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், 1 முதல், 8ம் வகுப்பு வரை, சீருடைகள் மாற்றப்படும்,” என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.நடப்பு கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், 1 முதல், 5ம் வகுப்பு வரை தனி சீருடையும், 9, 10ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும்; பிளஸ் 1, பிளஸ் 2க்கு தனி சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டும், சீருடை மாற்றப்படவில்லை.

இதில், 1 முதல், 5ம் வகுப்பு வரையில், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சீருடை, மாணவர்களின் தோற்றத்தை சிறப்பாக காட்டவில்லை என, பள்ளி கல்வி அமைச்சருக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, மீண்டும், 1 முதல், 5ம் வகுப்பு வரையான, சீருடைகளின் நிறமும், வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், ஏழு ஆண்டுகளாக, ஒரே சீருடை அமலில் உள்ள, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ள, சீருடை தொடரும்.’இந்த சீருடை திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்’ என, பள்ளி கல்வி

அமைச்சர்,செங்கோட்டையன் அறிவித்தார்.எனவே, அடுத்த ஆண்டு முதல், 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மொத்தம் நான்கு வகை சீருடைகள் அமலாகின்றன. இதில், 1 முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரசின் சார்பில், இலவசமாக சீருடைகள் வழங்கப்படும்.மற்ற வகுப்பினருக்கு, சீருடைக்கான தொகை வழங்கப்படும்; அவர்களே தைத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும், ‘சஞ்சாய்கா’ திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:ஐ.சி.டி., என்ற, தகவல் தொழில்நுட்ப வழி கல்வி வகுப்பறை திட்டம், இந்த மாத இறுதிக்குள் துவங்கப்படும். மேலும், 3,000 பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், ‘ஸ்மார்ட்’ வகுப்பறை அமைக்கும் திட்டம், நவ., இறுதிக்குள் அமலுக்கு வரும். வணிகவியல் மாணவர்களுக்கான,’சி.ஏ., ஆடிட்டர்’ தேர்வுக்கான இலவச பயிற்சி, அடுத்த மாதம் துவங்க உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், புறநகர் பகுதிகளில் உள்ள, அரசு பள்ளி மாணவர்கள், இலங்கைக்கு சென்று, கராத்தே போட்டியில் பங்கேற்க, நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிகளில், மழலையர் கல்வி படிக்கும், 72 ஆயிரம் மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளனர். சமூக நலத்துறையுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவர்களிடம், சிறு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில், மீண்டும், ‘சஞ்சாய்கா’ சிறு சேமிப்பு திட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *