Inji-Idupazhagi-30102015ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குனர் ஜெயம் ராஜா இயக்குனர் திருமணி புகழேந்தி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஏ.எல்.அழகப்பன், சிவி.குமார், சிவா, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இசை வெளியீட்டுக்கு பின்னர் நாசர் பேசியதாவது: “நான் இந்த விழாவுக்கு ஒரு நடிகராகவோ, நடிகர் சங்க தலைவராகவோ வரவில்லை. ஒரு அப்பாவாக வந்திருக்கிறேன். நான் அனுஷ்காவை எனது மகளாக தத்தெடுத்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, அனுஷ்கா என்னிடம் வந்து இந்த படத்தின் கதையை சொன்னார். குண்டான வேடத்தில் நடிக்க சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவரோ, தானே சிரத்தை எடுத்து இதில் நடிப்பதாக கூறினார். அவர் தொழில் மீது வைத்துள்ள மரியாதையை அது காட்டுகிறது’ என்று கூறினார்.

மேலும் ஆர்யா குறித்து நாசர் கூறியபோது, “ஆர்யா எப்போதும் பெண்களுடன் மட்டுமே பேசுவார் என்று பலரும் கூறுகின்றனர். அப்படியெல்லாம் கிடையாது. அவர் எல்லோருடனும் கலகலப்பாக பழகக் கூடியவர். அவருடன் நான் 3-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவர் இருந்தால் அந்த படப்பிடிப்பு தளமே மிகவும் கலகலப்பாக இருக்கும். அவருடன் நடித்தது எல்லாம் மறக்கமுடியாது’

இந்த விழாவில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் டிரைலரை வெளியிட்ட இயக்குனர் ஜெயம் ராஜா பேசியதாவது: “இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பற்றி பரவலான ஒரு கருத்து அனைவரிடமும் இருந்து வருகிறது. அதை சரியாக புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனெவே, இயக்குனர் பாக்யராஜ் உடல் பருமனை மையமாக வைத்து ‘சின்ன வீடு’ என்ற படத்தை கொடுத்தார். அது அன்றைய காலகட்டத்துக்கு கச்சிதமாக பொருந்தியது. அதேபோல், இந்த படம் இன்றைய காலகட்டத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.

மேலும் அனுஷ்கா குறித்து ஜெயம் ராஜா கூறியபோது, “அனுஷ்கா இதுவரை எனக்கு அறிமுகமானதில்லை. ஆனால், அவருடைய படங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அனுஷ்காவை பார்க்கும்போது, கமலும், விக்ரமும் கலந்த ஒரு நடிகையாகவே நான் பார்க்கிறேன். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது என்று கூறினார்.
English summary-Inji Iduppazhagi Audio Launch event<>