ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்-லைனில் பதிவு செய்ய செப்டம்பர் 30 கடைசி தேதியாகும்.

என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எஃப்.டி. மற்றும் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பி.டெக்., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வு, அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ. பிரதானத் தேர்வு (அட்வான்ஸ்டு) ஆகியவை நடத்தப்படுகின்றன.

முதல் நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி.. சி.எஃப்.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அதேசமயம், முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்று, பிரதானத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

இதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சி.பி.எஸ்.இ.) , பிரதானத் தேர்வை ஏதாவது ஒரு ஐஐடி-யும் இதுநரை நடத்தி வந்தன.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டுக்கான முதல்நிலைத் தேர்வை நடத்தும் பொறுப்பை, என்.டி.ஏ. மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. அதன்படி, ஜே.இ.இ. (முதல்நிலை) தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

புதிய நடைமுறை: ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தொடர்ச்சியாக இரண்டு முறை முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும். முதலில் 2019 ஜனவரியிலும், அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலும் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும்.

அதாவது, ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வில் திருப்திகரமான மதிப்பெண் பெறாத மாணவர்கள், உடனடியாக ஏப்ரலில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்கலாம். இந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எதுவோ அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இரண்டு தேர்வுகளுக்குப் பிறகே ஜே.இ.இ. பிரதானத் தேர்வு நடத்தப்படும்.

தேர்வு எப்போது?: தேர்வானது 2019 ஜனவரி 6 முதல் ஜனவரி 20 -ஆம் தேதி வரையிலான ஏதாவது ஒரு தேதியில் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி விரைவில் இறுதி செய்யப்பட்டு என்.டி.ஏ. இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க செப்.30 கடைசி: இந்தத் தேர்வுக்கு www.jeemain.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசித் தேதியாகும். தேர்வு முடிவுகள் 2019 ஜனவரி 31 ஆம் தேதி என்.டி.ஏ. இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும் விவரங்களை https://ntanet.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *