இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. விஜய், ஸ்ரேயா நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் இயக்கும் விஜய் 60′ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த பரிசீலனை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. காஜல் அகர்வால், நயன்தாரா, சமந்தா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்களின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘ரஜினிமுருகன்’ பெற்ற மாபெரும் வெற்றிதான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்திசுரேஷூக்கு கிடைக்க காரணம் என கூறப்படுகிறது.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் எடிட்டராக ப்ரவீன் மற்றும் விஜய்யுடன் நடிக்கும் காமெடியனாக சதீஷ் ஆகியோர் ஏற்கனவே இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Keerthi Suresh is going to starring against Vijay.