மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாலிடெக்னிக் தேர்வுகள் முன்கூட்டியே மார்ச் 29-இல் தொடங்குகிறது. தமிழக உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.

இதில் 21,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். நிகழாண்டில் கல்லூரி வேலை நாள்கள் மார்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. தொடர்ந்து ஏப்ரல் 4-ஆம் தேதியிலிருந்து, பருவத் தேர்வுகள் தொடங்குமென அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-இல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, பாலிடெக்னிக் தேர்வுகளை முன்கூட்டியே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட தகவல்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாலிடெக்னிக் கல்லூரிகளின் பருவத் தேர்வு தேதிகள் மாற்றப்படுகின்றன. அதன்படி, மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 29-இல் தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து, தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் 21-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, ஏப்ரல் 22-இல் தொடங்கும் தேர்வுகள், ஏப்ரல் 26-ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தேர்வுகள், ஏப்ரல் 22 முதல் மே 5-ஆம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், 2, 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 27 முதல் மே 12-ஆம் தேதி வரையும் நடைபெறும். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மே 13 முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *