கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் பலவித தடைகளுக்கு பின்னர் ரிலீஸாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகமான ‘விஸ்வரூபம் 2’ எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி கமல் ரசிகர்களின் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறது.

விஸ்வரூபம் 2 படத்தின் உரிமையை ஆஸ்கார் ரவிச்சந்திரன் வாங்கி வைத்திருந்தார். ஆனால் தற்போதைய நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாலும், விரைவில் அவருடைய சொத்துக்களை பிரபல வங்கி ஒன்று ஏலத்திற்கு விட உள்ளதாலும், கமல் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் இருந்து விஸ்வரூபம் படத்தின் உரிமையை திரும்ப பெற்று அதை தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, கமல் விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தை தனது சொந்த நிறுவனம் மூலம்தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கூடிய விரைவில் ‘விஸ்வரூபம் 2’ வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Since Aascar Ravichandran assets has been disabled Kamal Haasan planned to get the movie rights and planned to release with Rajkamal internationals.