சினிமா ரசிகர்கள் தற்போது அதிக கட்டணம் கொடுத்து திரையரங்குகளில் திரைப்படங்களை பார்த்து வருகின்றனர். பொதுமக்களின் பணத்தை மிச்சப்படுத்த அம்மா உணவகம் போன்ற பல புதிய முயற்சிகளை செய்து வரும் தமிழக அரசு சமீபத்தில் சென்னையில் அம்மா திரையரங்குகள் ஆரம்பிக்க முடிவு செய்து அந்த பொறுப்பை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்தது.

சென்னை மாநகராட்சி சென்னையில் ஏழு இடங்களில் அம்மா திரையரங்குகள் கட்ட முடிவு செய்தது. தற்போது அம்மா திரையரங்குகளுக்கான இடத்தை இறுதி செய்துவிட்டதாகவும், இந்த இடங்களுக்கு அரசு அனுமதி கொடுத்தவுடன் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் மாநகாராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி.நகர், கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராமாபுரம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களிலும் அம்மா திரையரங்கம் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் தி.நகர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்படவுள்ள அம்மா திரையரங்கம் மட்டும் வணிக வளாகத்துடன் கூடிய தியேட்டராக கட்ட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்சாதன வசதியுடன் கூடிய கட்டப்பட இருக்கும் அம்மா திரையரங்குகள், மற்ற திரையரங்குகளின் கட்டணத்தை விட 25 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Seven Places Selected for Amma theaters in Chennai.