தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் உள்ள 1078 உதவி ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த 23ஆம் தேதி நடத்தியது. தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களிலும், சென்னையில் மட்டும் 22 தேர்வு மையங்களிலும் இந்த தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், சுமார் 80 சதவீதம் பேர் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதேபோல காவல்துறை ஒதுக்கீட்டுதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் இந்த இரு தேர்வுகளுக்குரிய முக்கிய விடைகள் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. முக்கிய விடைகளை, தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். தேர்வில் கேட்கப்பட்ட வினா, முக்கிய விடைகளில் ஏதேனும் தவறு அல்லது மாறுபாடு இருந்தால் விண்ணப்பதாரர்கள் முறையீடு செய்யலாம் என தேர்வு வாரியம் கூறியுள்ளது. ஆனால் இந்த முறையீட்டினை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தகுந்த ஆதாரங்கள் இல்லாத முறையீடு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வினா – முக்கிய விடைகள் தொடர்பான முறையீட்டினை தேர்வு வாரிய அலுவலகத்துக்கு தபால் மூலமாகவோ அல்லது usrb91@gm​ail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ வரும் ஜூன் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

English Summary: SI written Exam’s important Questions and Answers were released in Internet, Tamilnadu Uniformed Service.