தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் சார்பாக, மின் இணைப்பு எண்களுடன், நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர், அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்று அச்சத்தில் உள்ளனர். ஆனால், அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்களும், அனைத்து மின் இணைப்புகளுக்கு ஒரே தொலைபேசி எண்ணைத்தான் இணைத்துள்ளனர். இந்த நிலையில், நுகர்வோர், தங்கள் மின் இணைப்புகளுடன் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். இதில் எந்த சிக்கலும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களும், தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கவும் மின் வாரிய இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வாடகைக்கு குடியிருப்பவர்களும், மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில், ஆதார் எண்ணை இணைக்க மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் சிறப்பு வசதி செய்துள்ளது. இதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று, மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலைக் கொடுத்து ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *