இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் கோவை மாவட்டத்தில் வழக்கமாக பெய்வதை விட 407 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை பதிவான மழை அளவுகளின் சராசரி 104 மிமீ ஆக உள்ளது. இது இயல்பான மழைப் பொழிவு என அழைக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, அந்தந்த ஆண்டுகளில் கிடைக்கும் மழை அளவை ஒப்பிட்டு, மழை இயல்பை விட அதிகமாக பெய்ததா, குறைவாக பெய்ததா என கணக்கிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை 528 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டுகளை விட 407 சதவீதம் கூடுதல் மழையாகும்.
அதேபோன்று, தேனி மாவட்டத்தில் இயல்பான மழைப்பொழிவு 76 மிமீ. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 346 மிமீ, அதாவது 354 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. மேலும் நீலகிரியில் 681 மிமீ (22 சதவீதம் அதிகம்), திருநெல்வேலியில் 277 மிமீ (190 சதவீதம் அதிகம்) மழை பதிவாகியுள்ளது. இப்பகுதிகளில் இதுவரை இந்த அளவு மழை பதிவானதில்லை.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது, “இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வலுவாக இருந்தது. அதன் தாக்கம் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இருந்தது. அதன் காரணமாக அதிக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது” என்றார்.
இடியுடன் மழை: அடுத்த சில தினங்களுக்கான மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
வெப்பச் சலனம் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகம், மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடல் தொந்தளிப்பு: மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. அதன் காரணமாக வங்கக் கடலின் மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே அப்பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.