சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் அதே சமயத்தில் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியது. தீர்ப்பை எதித்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என கேரள அரசும், கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் கூறின.
தீர்ப்புக்கு எதிராக கேரளா மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. நாளை மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட உள்ளது. அப்போது, பெண்கள் கோவிலுக்கு வந்தால் அனுமதிக்கப்படலாம் என்பதால், அவர்களை எதிர்க்க பல அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளன. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது
இந்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு, பந்தளம் அரச குடும்பம், ஐயப்ப சேவா சங்கம், இந்து அமைப்புகள் ஆகியவற்றுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பந்தளம் அரச குடும்பத்தினர் கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதற்டையே, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “சபரிமலைக்குள் நுழையும் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். சட்டத்தை யாரும் கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.