லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒருசேர சங்கமிக்கும் பகுதியில் பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் நகரம் உள்ளது. அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத் ஐகோர்ட் ஆகியவற்றால் இந்நகரின் பெயரை அடிக்கடி செய்திகளில் காண முடியும்.

அலகாபாத் நகரில் வரும் ஜனவரி மாதத்தில் கும்பமேளா நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் அங்குள்ள சாதுக்கள், ஜீயர்கள் மற்றும் பூசாரிகளுடன் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்துக்களின் ரிக் வேதம் மற்றும் ராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பியங்களில் இந்த இடம் பிரயாக்ராஜ் என குறிப்பிடப்பட்டுள்ளதால் அலகபாத் நகரத்தின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்றம் செய்ய விரும்புவதாக அவர்களிடம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார். இந்த முடிவுக்கு அவர்களும் இசைவு அளித்தனர்.

இதைதொடர்ந்து, இன்று முதல்-மந்திரி தலைமையில் கூடிய மந்திரிசபை கூட்டத்தில் அலகாபாத் நகரத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றம் செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நகரம் இன்று முதல் பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படும். இந்த முடிவின்மூலம், இந்திய கலாசாரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என அம்மாநில மந்திரி சித்தார்த்தநாத் சிங் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *