இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், பசுமை வழிச் சாலைபகுதியில் அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு, 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம்-சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.

இவற்றில் 3-வது வழித்தடமான மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் 28 சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் 1.2 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கியது.

70 அடி ஆழத்தில் இதில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவேரி’ டிபி சாலைக்கு கீழே சுரங்கப் பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகேஅடையாறு ஆற்றைக் கடந்து,அடையாறு சந்திப்பு நிலையத்துக்குச் சென்றடைய உள்ளது. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் இதுவரை 185 மீட்டர் வரை சுரங்கப் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இங்கு பயன்படுத்தப்படும் 2-வது இயந்திரம் மூலமாக 80 மீட்டர் வரை சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “3-வது வழித்தடத்தில் பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கம் தோண்டும் 2 இயந்திரங்கள், அடுத்த மாத இறுதியில் அடையாறு ஆற்றை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அடையாறு ஆற்றில் 70அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 400 மீட்டர் நீளம் கொண்ட அடையாறு ஆற்றில் சுரங்க தோண்டும் இயந்திரத்தின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *