தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று(22.08.2023) பெரும்பாலான இடங்களிலும், நாளை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

நேற்று (21.08.2023) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தையில் 2 செ.மீ., சேலம் மாவட்டம் தலைவாசல், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் எஸ்டேட், பார்வூட், செருமுல்லி, நடுவட்டம், பந்தலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *