ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா தண்ணிர் பாட்டில், அம்மா உப்பு, அம்மா காய்கறி நிலையம் ஆகியவை உள்பட ஏராளமான திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் ஒரே இடத்தில் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மலிவு விலையில், நிறைவான தரத்துடன், ஒரே இடத்தில் பெறுவதற்கு வசதியாக சென்னையில் அம்மா மலிவு விலை வாரச்சந்தை அமைக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தார். இதன்படி தற்போது 200 கடைகளுடன் அம்மா மலிவு விலை வாரச்சந்தை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அதை திறந்து வைக்கவுள்ளார்.
இந்த பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பெருநகர மாநகராட்சி சார்பில் தொடர்பு அலுவலராக இணை வேளாண்மை இயக்குனரும், பூங்காத்துறை கண்காணிப்பாளருமான ப.ஜெயபால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் அனைத்து அரசு துறைகளிலும் தொடர்பு கொண்டு அங்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமித்து, அம்மா மலிவு விலை வாரச்சந்தையில் கடைகள் அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
சென்னையில் அரும்பாக்கம், தங்கசாலை கோட்டூர்புரம், தரமணி, வளசரவாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா மலிவு விலை வாரச்சந்தை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு தற்சமயம் அந்த இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “அம்மா மலிவு விலை வாரச்சந்தை மூலம் அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. சென்னையில் 7 இடங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் திருவிழா போல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் 7 இடங்களில் ஒவ்வொரு நாளும் வாரச்சந்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது அந்த இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.
100 சதுர அடியில் ஒரு கடை வீதம் வாரச்சந்தையில் மொத்தம் 200 கடைகள் இடம் பெற உள்ளன. இதில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, சிறைத்துறை, காதி மற்றும் கிராம தொழில்துறை, கைவினை பொருட்கள், ‘எல்காட்’, பால்வளத்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை என தமிழக அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளின் சார்பில் கடைகள் அமைக்கப்படுகின்றன.
தற்போது 20 துறைகளில் பேசி அவர்களுக்கு எத்தனை கடைகள் தேவை என்று கேட்டு, இதுவரை 115 கடைகள் வரை முன்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. மீதமுள்ள துறைகளில் பேசிக்கொண்டு இருக்கிறோம். விரைவில் மீதமுள்ள கடைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும். இந்த கடைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா விரைவில் திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary :”amma weekly market” open shortly 7 places in chennai