ஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆடி மாதம் 18-ந் தேதி மட்டும் வரும் ‘பதினெட்டாம் பெருக்கு’ மட்டும் அதற்கு விதி விலக்கு. அந்த நாளில் மட்டும் நல்லநேரம் பார்த்து புது வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம். அன்று காலை 10 மணி முதல் 10.30 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதிய முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று காவிரி பாய்ந்து செல்லும் பகுதிகளில் ஆடிப் பெருக்கு விழா சிறப்பாக நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா ஒப்புக்குத்தான் நடந்ததே தவிர களைகட்டவில்லை. ஏனெனில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை.

தண்ணீருக்கு பதிலாக பாறைகளும் வெறும் மணலாகவும் காட்சியளித்தது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் காவிரி ஆறு பொங்கி வருகிறது. ஆடிப்பெருக்குக்கு ஏற்றவாறு வெள்ளம் பெருக்கு புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா முன்கூட்டியேகளை கட்டிவிட்டது.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் இடங்களில் முக்கிய இடமாக கருதப்படுவது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை ஆகும். பவானி, காவிரி, அமுத நதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்தான் பவானி கூடுதுறை.

இங்கு அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா பவானி கூடுதுறையில் அமர்க்களமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் மட்டு மல்லாமல் திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் நாளை அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிகிறார்கள். இவர்கள் பொங்கி வரும் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள்.

புதுமண தம்பதிகள் தங்களது மணமாலையை ஆற்றில் விட்டு வழிபடுகிறார்கள்.

சுமங்கலி பெண்கள் தங்கள் வாழ்க்கை நாயகன் நலமுடன் வாழ வேண்டி வணங்கி புது தாலிக்கயிறு அணிவார்கள்.

திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு ஏற்ற மணவாளன் கிடைக்க வேண்டியும், திருமண வாழ்க்கைகை கூட வேண்டியும் வழிபடுகிறார்கள்.

குறிப்பாக விவசாய பெருமக்கள் தங்களின் விவசாய நிலங்களை செ(கொ)ழிக்க வைக்கும் காவிரி தாயை வணங்கி மகிழ்வார்கள்.

காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு செல்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். ஆழமான பகுதி யில் பக்தர்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் ஓரமாக எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டு உள்ளது.

போலீசார் ஆற்றில் பரிசலில் சென்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *