சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெண்கள் முன்னேற்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 2 மெட்ரோ ரயில் நிலையங்களை அனைத்து பெண்கள் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளைக் கவரும் வகையில் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண்கள் முன்னேற்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஷெனாய் நகர் ரயில் நிலையத்தை ஜூலை 31 முதல் அணைத்துப் பெண்கள் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில், டிக்கெட் கொடுப்பது போன்ற மேலாண்மை பணிகள், பயணிகள் பரிசோதனை, கண்காணிப்பு பணி, துப்புரவு பணிகள் என அனைத்து பணிகளையும் பெண்களே செய்கிறார்கள் என்று அறிவித்துள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் பெண்களுக்காக ஏற்கெனவே பல வசதிகளும் சிறப்பு அம்சங்களும் செய்யப்பட்டுள்ளன. ஷெனாய் நகர் ரயில் நிலையத்தை இரண்டு ஷிஃப்ட்டுகளில் மொத்தம் 15 பெண்கள் நிர்வகித்துவருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

அதே போல, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமான கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து பெண்கள் ரயில் நிலையமாக செயல்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்து பெண்கள் ரயில் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கெனவே பெண்களுக்கு சிறப்பு ரயில் இயக்கி வருகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக மெட்ரோ ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை நிறுவியுள்ளது. அதே போல, ஏதேனும் அவசரம் என்றால் பயணிகள் ரயிலை இயக்குபவருடன் பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *