செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 490 கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தற்போது 22.10 அடியை எட்டியுள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.29 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 532 கனஅடியில் இருந்து 452 கனஅடியாக சரிந்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3,195 மில்லியன் கனஅடியாக உள்ளது.

உபரி நீர் கூடுதலாக திறக்கப்பட்ட நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும்.

எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *