புதுடில்லி: விமானத்தில் செல்லும் போது, மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்தும் சேவை, அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
விமானங்களில் பயணம் செய்யும் போது, மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பாக, மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்துக்கு, ‘டிராய்’ என்ற, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைகள் அளித்தது. இந்த பரிந்துரைகளை ஏற்று, விமானத்தில், மொபைல் போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: விமானம், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க துவங்கிய பின், மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துவது தொடர்பாக, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.
இதற்கு, தொலை தொடர்பு நிறுவனங்கள் உரிமம் பெறுவதற்கான விதிகள் உருவாக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது. சட்ட அமைச்சகம் அனுமதி அளித்த இரு வாரங்களில், உரிமம் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, அக்டோபர் முதல், விமானத்தில், மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துவது நடைமுறைக்கு வரும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.