நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டுபவர்.
விவேகம் படப்பிடிப்பின்போது அஜீத். ஆளில்லா விமானத்தை ரிமோட் மூலம் இயக்கும் வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி வைரலானது.
உலகின் பல்வேறு நாடுகள் ஆளில்லா விமானங்களை இயற்கை பேரிடர் சமயங்களில் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா எனும் குழுவை உருவாக்கினர்.
இந்த குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே ரிமோட் மூலம் வாகனங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான அஜித்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் தக்ஷா குழு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பல்கலைக்கழக அளவிலான ஏரோ டிசைன் போட்டியில் தக்ஷா குழு தங்களது திறனை வெளிப்படுத்தியது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் தக்ஷா குழு பங்கேற்றது.
அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்ஷா அணிக்கு அந்த சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்துள்ளது.
மேலும் அஜித் மேற்பார்வையில் தக்ஷா அணியினர் உருவாக்கிய ஆளில்லா விமானம் அதிக நேரம் வானில் பறந்து சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் 8 நாடுகளை சேர்ந்த 11 குழுக்கள் தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.