சென்னை: தமிழகத்தில் வரும் 7ம் தேதி மிகக் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
மக்களின் இன்றைய முழு நேர விவாதமே ரெட் அலர்ட் தான். அன்றைய தினம் எப்படி இருக்கும், வெளியில் செல்ல முடியுமா? அன்றாடப் பணிகளை பார்க்க முடியுமா என்ற ஆயிரமாயிரம் கேள்விகள் பொதுமக்களுக்கு எழத்தான் செய்யும்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் தெளிவுபடுத்துகிறது.
அதில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால், மழை எச்சரிக்கை என்பது நான்கு வகைப்படும்.
பச்சை நிறம் – மிதமான மழைக்கு வாய்ப்பு. (நடவடிக்கை தேவையில்லை)
மஞ்சள் நிறம் – ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு. (வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனிக்க வேண்டும்)
ஆரஞ்சு நிறம் – ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை (தயாராக இருக்க வேண்டும்)
சிவப்பு நிறம் – பரவலாக மிக அதிகக் கன மழைக்கு வாய்ப்பு. (தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும், நிவாரணப் பணிகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்)
மிக அதிகக் கன மழை என்றால் எவ்வளவு?
மிக அதிகக் கன மழை என்றால் 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரையிலானதாக இருக்கும். அதே சமயம், குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பரவலாக மிக அதிகக் கன மழை என்பது ஒரு மாநிலத்தின் 51 – 75% இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக அர்த்தமாகிறது. அதாவது ஒரு மாநிலத்தில் இந்தெந்த மாவட்டங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு பல மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு என்பதும் பொருள்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, ரெட் அலர்ட் என்றால் ஏதோ சென்னை அல்லது காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் என்பதால், நீங்கள் அச்சப்படுவது போல டிசம்பர் 1ம் தேதி சென்னை வெள்ளம் போல உங்களை வெள்ளம் மூழ்கடித்துவிடாது என்பதை முதலில் உணருங்கள். இந்த அலர்ட் ஒட்டுமொத்த மக்களுக்கானது அல்ல, நிர்வாகப் பணிகளுக்கானது என்பதை முதலில் உணருங்கள்.