தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும். அதன்பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது. தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர்மழை காரணமாக சென்னை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.