கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளைச் சீரமைக்க பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புயலில் கல்வி உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்க கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் கஜா புயல் காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டு வர அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றின் ஒரு பகுதியாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் புயல் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல இடங்களில் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றில் ஜன்னல்கள், மேற்கூரைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் மாணவர் விடுதிகளும், கழிவறைகளும் இடிந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன. புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க கல்வித் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, மாணவ, மாணவிகளுக்கு பாடநூல் நோட்டு புத்தகங்கள், கணித உபகரண பெட்டி உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் மீண்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.