திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின்போது, 7 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான பரணி, மகா தீபங்கள் ஏற்றும் நிகழ்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படும் பரணி தீபத்துக்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்துக்கு 10 ஆயிரம் பக்தர்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
தீபத் திருவிழாவுக்காக திருவண்ணாமலை நகரைச் சுற்றி 16 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கிருந்து 2,650 சிறப்புப் பேருந்துகளும், அருகே உள்ள கிராமங்களுக்கு கூடுதலாக 500 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். 77 இடங்களில் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படும்.
தற்காலிகப் பேருந்து நிறுத்தங்களில் இருந்து கோயில் அருகில் வரை பக்தர்களை கட்டணம் இல்லாமல் அழைத்துச் செல்ல 60 இலவசப் பேருந்துகள் இயக்கப்படும். அண்ணா நுழைவு வாயில், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சிப் பள்ளி என 2 இடங்களில் பொருள்கள் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்படும். 7 இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்படும் என்றார்.
முன்னதாக, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.