சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குழாய் மூலம் வழங்கும் குடிநீர் வீணாவதைத் தடுக்க குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்களுக்கு குடிநீர் அளவு மானியைப்பொருத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் சுமார் 80 லட்சம் பேர் வசிக்கின்றனர். 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். குடியிருப்புகள், நிறுவனங்கள் என 8 லட்சத்து 42 ஆயிரம் குடிநீர் இணைப்புகளைச் சென்னை குடிநீர் வாரியம் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் தினமும் சுமார் 1000 மில்லியன் லிட்டருக்கு மேல் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
குடிநீர் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவை கணக்கிட, அனைத்து வணிகக் கட்டிடங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு மேம்பட்ட அளவுமானி பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒப்பந்த ஆவணங்களைத் தயாரித்து வருகிறோம். வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அளவு மானிகளைப் பொருத்தும் பணிகள் தொடங்கப்படும்.
தற்போது பெரும்பாலான வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களில் அளவில்லாத நீர் விநியோகத்தைப் பெறுகின்றனர். ஒவ்வொரு குடியிருப்பும் எவ்வளவு நீரைப் பயன்படுத்தினாலும் ஒரு மாதத்துக்கு நிலையாக ரூ.84 செலுத்துகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வணிக மற்றும் அதிக அளவு குடிநீர் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்காக சுமார் 21 ஆயிரம் அளவு மானிகள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு 500 கிலோ லிட்டர் வரை (ஒரு கிலோ லிட்டர் என்பது 1000 லிட்டர்) ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.114, கல்வி நிறுவனங்களுக்கு ரூ.94, பிற நிறுவனங்களுக்கு ரூ.81 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படிப்படியாக அனைத்து அடுக்குமாடி, வணிக பிரிவுகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் அளவுமானிகள் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.