வில்லிவாக்கம் கண்ணாடி பாலம் 3 மாதத்துக்குள் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை தினத்தையொட்டி, சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையை சீரமைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது. சாலையோர சுவர்களில் வண்ணமயமான சுவர் ஓவியங்கள், புதிதாக சாலைகள் அமைக்கும் போது, சாலை தடுப்பு மற்றும் நடைபாதைகளை அமைக்கவும், பூங்காக்களில் செயற்கை நீரூற்றுகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுமைதானங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து நெரிசல் குறையும்: மேலும் சென்னையில் தற்போது 17 மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவுற்ற பின்போக்குவரத்து நெரிசல் சென்னையில் வெகுவாக குறையும். அதேநேரம் பெண்களுக்கான பாதுகாப்பை முன்னெடுக்கும் வகையில் சுரங்கப்பாதைகள் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்து, மேம்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம்.
சென்னை விக்டோரியா அரங்கை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விக்டோரியா அரங்குசீரமைப்பு பணிக்காக தனிசிமென்ட் மற்றும் கம்பிகள் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. 2024-ம்ஆண்டுக்குள் இந்த சீரமைப்பு பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளோம்.
அதேபோல வில்லிவாக்கத்தில் நடைபெற்று வரும் கண்ணாடி மேம்பாலத்துக்கான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இன்னும் 3 மாத காலத்துக்குள் மக்களின் பயன்பாட்டுக்காக இப்பாலம் திறந்து வைக்கப்படும். இவ்வாறு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறினார்.