வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று (ஆக.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 23-ம் தேதி (இன்று) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 24-ம் தேதி முதல் 28-ம்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், சென்னை கலங்கரைவிளக்கத்தில் 4 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 3 செ.மீ., சேலம் மாவட்டம் தலைவாசல், ஈரோடு மாவட்டம் பவானி, செங்கல்பட்டில் தலா 2 செ.மீ. மழை பதிவானது.

இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் நேற்று காலை மிதமான மழை பெய்தது. கீழ்ப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, வளசரவாக்கம், கே.கே.நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *