தொடர் விடுமுறைக் காலத்தையொட்டி மேட்டுப்பாளையம் – உதகை, உதகை – குன்னூர் மற்றும் உதகை – கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
நீலகிரி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணிக்க ஆர்வம் காட்டுவதால், விடுமுறைக் காலத்தில் சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உதகை-குன்னூர் இடையே வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளிலும், 30 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் 4 முறையும் மலை ரயில் இயக்கப்படும்.
குன்னூரிலிருந்து உதகைக்கு 17 மற்றும் 18-ம் தேதிகளிலும், அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதிகளிலும் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலில் 80 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இடங்கள் இருக்கும்.
மேட்டுப்பாளையம் முதல் உதகை இடையே 16, 30-ம் தேதிகளிலும், அக்டோபர் 21 மற்றும் 23-ம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 40 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இடங்களும், குன்னூர் முதல் உதகை வரை 80 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இடங்களும் இருக்கும்.
உதகை முதல் கேத்தி வரை 17-ம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் காலை 9.45 மற்றும் 11 மணி, மாலை 3 மணிக்கு இயக்கப்படும். அனைத்து சிறப்பு ரயில்களும் முன்பதிவு முறையில் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று (11.09.2023) காலை 8 மணி முதல் தொடங்கும்.