தமிழ்நாடு, புதுச்சேரியில் திங்கள்கிழமை முதல் 6 நாள்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, திங்கள் முதல் சனிக்கிழமை (செப்.11-16)வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு(மி.மீ):
- திருக்கோவிலூா் (கள்ளக்குறிச்சி), வெங்கூா் (கள்ளக்குறிச்சி) தலா 50,
- திருப்பாலப்பந்தல் (கள்ளக்குறிச்சி), மாதம்பூண்டி (கள்ளக்குறிச்சி) தலா 40.
திங்கள்கிழமை (செப்.11) தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.