2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி உழவர் திருநாள், காணும் பொங்கலையொட்டி தொடர் அரசு விடுமுறை உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதுண்டு. இதற்காக சிறப்புப் போக்குவரத்து வசதிகளும் செய்யப்படும். இதில், ரயில் பயணத்திற்கு 120 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கும்.
இந்நிலையில்,
- ஜனவரி 11 ஆம் தேதி(வியாழக்கிழமை) ரயிலில் பயணிக்க இன்று(13.09.2023) முன்பதிவு தொடங்கியுள்ளது.
- ஜனவரி 12-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) பயணிக்க நாளையும்(14.09.2023),
- ஜனவரி 13-ஆம் தேதி(சனிக்கிழமை) பயணிக்க செப். 15 ஆம் தேதியும்,
- ஜனவரி 14-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரயிலில் பயணிக்க செப். 16-ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களிலும் முன்பதிவு செய்யலாம்.