சென்னையில் சென்ற ஆண்டு தீபாவளி காற்றுத் தர மாசின் அளவைவிட நடப்பு ஆண்டு தீபாவளி காற்றின் மாசு அளவு 40 விழுக்காடுகள் (AQI) குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றூம் ஒலி மாசு அளவையும் கண்டறிய பெருநகர சென்னை மாநகரத்தில் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுக்கார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 7 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உச்ச நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 15 நாட்களுக்கு (தீபாவளிக்கு 7 நாட்கள் முன்பு, தீபாவளி அன்று மற்றும் அதன் பின்னர் 7 நாட்கள்) காற்று மாசு காரணிகளின் அளவுகளைக் கண்காணித்து வருகிறது. மேலும் ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் மற்றும் தீபாவளிக்குப் பின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தீபாவளிப் பண்டிகைக்கு முன் அதாவது 6.11.2003 அன்று குறைந்த அளவாக ஒலி மாசு திருவொற்றியூரில் 52.3 டெசிபள் ஆகவும், அதிக அளவாக ஒலி மாசு 64.7 டெசிபளாகவும் கண்டறியப்பட்டது. மேலும் தீபாவளி அன்று குறைந்த அளவாக ஒலி மாசு தியாகராய நகரில் 60.5 டெசிபளாகவும், அதிகபட்ச அளவாக ஒலி மாசு வளசரவாக்கத்தில் 83.6 டெசிபளாகவும் அறியப்பட்டுள்ளது. ஆகையால், தீபாவளி அன்று கண்டறியப்பட்ட ஒலி மாசு அளவுகள் வரையறுக்கப்பட்டு தேசிய சுற்றுப்புற ஒலி மாசுபாட்டின் அளவுகளைவிட அதிக அளவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.