.ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் 2016ஆம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தமிழகம் முழுவதுமே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள் என 25 பேரை மட்டுமே கொண்ட ஒரு துறை சுமார் 3.5 லட்சம் அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து தேர்தலை நடத்த தயாராகி உள்ளது.
தேர்தல் அதிகாரிகளாக தமிழக அரசு அதிகாரிகள் பணியாற்றினாலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் அவர்கள் இயங்கி வருகின்றனர். தலைமை தேர்தல் ஆணையரின் கீழ், தமிழகத்தில் பொதுத் தேர்தல் துறைக்கு, தமிழக பிரிவைச் சேர்ந்த வேற்று மாநில அதிகாரி ஒருவர் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். தற்போது தலைமை தேர்தல் அதி காரியாக இருப்பவர் ராஜேஷ் லக்கானி என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தப்பணிகள் நடைபெறும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் இந்த துறையில் தலைமை தேர்தல் அதிகாரி, இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் மூவர், சார்பு செயலர்கள் 3 பேர், பிரிவு அலுவலர்கள் 7 பேர் மற்றும் இதர பணியாளர்கள் என 25 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
ஆனால் தேர்தல் நடைபெறும்போது இந்த துறையின் கீழ் பெரும்பான்மையான அரசு அதிகாரிகள் வந்து விடுவார்கள். அப்போது தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். குறிப்பாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், அரசுத்துறை அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வந்துவிடுவர். அதன்பின் எந்த மாற்றமாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றே மேற்கொள்ள முடியும். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி யுள்ளதால் மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் பணிகளுக்கு உதவ, தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை 234 தொகுதிகளையும் தலைமை தேர்தல் அதிகாரி, கூடுதல், இணை, துணை அதிகாரிகள் கண்காணிக்க முடியாது. எனவே, இவர்கள் கட்டுப் பாட்டு, கண்காணிப்பு அதிகாரிகளாக மட்டுமே செயல்படுகின்றனர்.
சென்னை தவிர இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ளனர். மதுரை, கோவை உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பர். அவர்கள் கூடுதல் தேர்தல் ஆணையர்களாக பணியாற்றுவர்.
சென்னை மாநகராட்சியில் 17 தொகுதிகள் வருகின்றன. இங்கு மாநகராட்சி ஆணையர்தான் மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருப்பார். மாவட்ட ஆட்சியர் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். இது தவிர, துணை ஆட்சியர்கள், மாநகராட்சி துணை கமிஷனர்கள், ஆர்டிஓக்கள், டிஆர்ஓக்கள், வட்டார வழங்கல் அதிகாரிகள், தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக (ஆர்ஓ) நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, வேட்பாளர்களிடம் இருந்து மனுக்களை பெறுதல், தேர்தல் பணிகளை கண்காணித்தல், பிரச்சாரங்களை கண்காணித்தல் போன்ற பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கீழ் இரண்டு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் துணை வட்டாட்சியர்களும் இப்பணியில் நியமிக்கப்படுவதுண்டு. இது தவிர பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் தேர்தல் பணிகளின்போது உரிய பதவிகள் அளிக்கப்பட்டு பணி ஒதுக்கப்படுகிறது.
English Summary: Tamil Nadu Assembly elections: 3.5 million state employees and 25 electoral personnel to coordinate.