checking8316தமிழக சட்டமன்றதுக்கு தேர்தல் தேதி மே 16 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள்  பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 26 சட்டமன்ற தொகுதிகள் முழுவதும் தற்போது சென்னை போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலான பகுதிகளும் பொன்னேரி, திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளும் சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளிலும் பறக்கும் படையினருடன் சேர்ந்து மாநகர போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மொத்தம் 78 பறக்கும் படையினர் 24 மணி நேரமும் ‘ஷீப்ட்’ முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் நேற்று முதல் முறையாக பறக்கும் படை சோதனையில் ரூ.23 லட்சம் சிக்கி உள்ளது. திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருவாய்த்துறை பெண் அதிகாரி மலர்விழி தலைமையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிரபல தனியார் கம்யூட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான காரை வழிமறித்து சோதனையிட்டனர். அதில் ரூ.23 லட்சம் இருந்தது. அந்த பணத்துக்கு உரிய கணக்கு இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூரில் ஆர்.கே. பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு மணவாளநகர் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது பையில் கட்டுக்கட்டாக ரூ.7 லட்சம் இருந்தது. காரில் இருந்த 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தபோது, திருநின்றவூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ஊழியர்களின் சம்பளத்திற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களையும் கொடுத்தனர். இதையடுத்து பறக்கும் படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பணத்துடன் அவர்கள் செல்ல அனுமதித்தனர்.

இந்த முறை பணப்பட்டுவாடாவை தவிர்க்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் ஒருசில அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

English Summary:Rs 23 lakh for election officials caught in Chennai.