புதுதில்லி: கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு கிளையாவது தொடங்கப்படுகிறது புதிய 648 அஞ்சல் வங்கி கிளைகளை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 21ல் திறந்து வைக்கிறார்.
உலகிலேயே மிகவும் பரவலான அஞ்சல் சேவையை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறை. குறிப்பாக இந்தியாவின் பல்வேறு கிராமங்களிலும், நவீன தொழில்நுட்பங்கள் இன்னும் தொட்டுக்கூட பார்க்காத இடங்களிலும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கி சேவையை பயன்படுத்தும் நோக்கில், ஜன்தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் மூலம் லட்சக்கணக்கான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக வங்கி நடைமுறைகள் மற்றும் நிதி சேவைகள் அனைத்தும் கிராமப்புறங்களையும் சென்றடையும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தபால் நிலையங்களில் வங்கி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டது.
‘இந்திய தபால் நிலைய செலுத்து வங்கி (ஐ.பி.பி.பி.)’ எனப்படும் இந்த திட்டம் வருகிற 21–ந் தேதி தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அத்துடன் ஐ.பி.பி.பி. செல்போன் செயலியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.
இந்த தபால் நிலைய வங்கிகளில், பிற வங்கிகளில் இருப்பது போல அனைத்து சேவைகளும் நடைபெறும். குறிப்பாக ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட் பெற்றுக்கொள்ளுதல், எந்த வங்கி கணக்குக்கும் பணப்பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட நிதி சேவைகளும், செல்போன் மூலம் பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் சேவைகளும் இந்த வங்கிகள் மூலம் பெற முடியும்.
மேலும், ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட், ஐ.எம்.பி.எஸ். போன்றவை மூலமான பணப்பரிமாற்றமும் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.