சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் மறைவிற்கு திரையுலகினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது நினைவை போற்றும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதை செயலில் நடத்த முடிவு செய்துவிட்டார் நிலா மதாப் பாண்டா என்ற பாலிவுட் இயக்குனர்

அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங்களையும், வலிகளையும் குறிப்பெடுத்து வரும் இயக்குனர் நிலா மதாப் பாண்டா, இதை ஒரு திரைப்படமாக எடுக்கவுள்ளதாக தெரிவித்தார். கலாமின் ஒவ்வொரு கருத்தையும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது நமது மிக முக்கியமான கடமை என்று கூறியுள்ள அவர் கலாம் அவர்களைப் பற்றிய முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

ஒரு பக்கம் அப்துல்கலாம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் இந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை முழு வேகத்துடன் தொடங்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த படத்தில் கலாம் வேடத்தில் நடிக்க அமிதாப் ஒருவர்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என அவர் கருதியதாகவும், இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். கண்டிப்பாக அமிதாப் இந்த படத்தில் நடிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

English Summary : Nila madhab Panda to take biography film of Abdul Kalam in which Amitabh Bachchan to play role of Abdul Kalam.