Anil Kumbleஇந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாவே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளின் தொடர்களை வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு ஆண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான போட்டியில் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ஸ்டுவர்ட் லா ஆகியோர்கள் இருந்த நிலையில் அனில் கும்ப்ளே வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ராகுல் டிராவிடை இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும்படி முதலில், அவரிடம் கோரிக்கை வைத்தேன். அவர் மறுப்பு சொல்லவில்லை. ஆனால் இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருக்கவே விரும்புகிறேன் எனக் கூறினார். இதுதான் டிராவிடம் உள்ள நல்ல குணம். அவர் பெரிய பதவியை அடைய விரும்பவில்லை. அது மூலமாக கிடைக்கும் பெரிய தொகையையும் விரும்பவில்லை.

சர்வதேச பயிற்சியாளர் என்ற அனுபவம் கும்ப்ளேவுக்கு இல்லாத போதிலும், பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் வழிவகுத்துள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் சாதனை படைத்ததை பயிற்சியாளர் பொறுப்புக்கான அவரது தகுதியாக பார்க்கிறோம். இருப்பினும், அவரது செயல்பாடு குறித்து ஓராண்டுக்குப் பிறகு ஆய்வு செய்யப்படும்’ என்று கூறினார்.

இதுகுறித்து கும்ப்ளே கூறியபோது, ‘என்னை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்த பிசிசிஐ-க்கு நன்றி. இந்திய அணியை உலகின் நம்பர் ஒன் அணியாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.

English Summary: Anil Kumble Choose as head coach of Indian Cricket Team.