மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், நாடு முழுவதும், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.’பாங்க் ஆப் பரோடா’வுடன், விஜயா வங்கி, தேனா வங்கிகளை இணைப்பதற்கான அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவும், அனுமதி அளித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பின், இரண்டாவதாக, இந்த மூன்று வங்கிகளும் இணைக்கப்பட உள்ளன.மத்திய அரசின் இந்த முடிவால், வங்கிகளின் வராக் கடனை மீட்பதில் பிரச்னை ஏற்படும்; ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக்கூறி, வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வங்கிகள் இணைப்பை எதிர்த்து, இன்று நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் மற்றும், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலர், சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:மூன்று வங்கிகள் இணைப்பை எதிர்த்து, தமிழகத்தில், 80 ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகள் உட்பட, நாடு முழுவதும், 10 லட்சம் பேர், இன்று நடக்கும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். நம்நாட்டில், காசோலை பரிவர்த்தனைக்காக, சென்னை, மும்பை, டில்லி என, மூன்று இடங்களில், ‘இன்ஸ்ட்ரூமென்ட் கிளியரன்ஸ் கிரிட்’ என்ற, காசோலை பரிவர்த்தனைக்கான கட்டமைப்பு உள்ளது.இவற்றில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய, சென்னை கட்டமைப்பில், 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஒன்பது லட்சம் காசோலைகளின் பரிவர்த்தனைகள் முடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *