மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 16-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை (31-ந்தேதி) முதல் வருகிற செப்டம்பர் 8-ந்தேதி வரை எழும்பூரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.

இதன் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., ஸ்டேட் வங்கி, சுங்க இலாகா, எஸ்.டி.ஏ.டி., சத்யபாமா, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் உள்பட 34 அணிகளும், பெண்கள் பிரிவில் அரைஸ் ஸ்டீல், ரைசிங் ஸ்டார், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 7 அணிகளும் ஆக மொத்தம் 41 அணிகள் பங்கேற்கின்றன.

‘நாக்அவுட்’ மற்றும் ‘லீக்‘ முறையில் போட்டி நடக்கிறது. ஆண்கள் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரமும், பெண்கள் பிரிவுக்கு ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர சிறந்த வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி பரிசு தொகையை வழங்குகிறது.

இந்த போட்டியின் தொடக்க விழா 1-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

போலீஸ் ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், எஸ்.கே.பி.சுந்தரம், பாஸ் போர்ட் மண்டல முன்னாள் அதிகாரி ருக்மாங்கதன், எத்திராஜுலு உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

மேற்கண்ட தகவலை மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் எல்.கிருஷ்ண மூர்த்தி, செயலாளர் எம். கனகசுந்தரம், பொருளாளர் எம்.எம்.டி.ஏ. கோபி ஆகியோர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *