தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கு புதிதாக விண்ணப்பித்தோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்.10) கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பி.டி.எஸ். படிப்புக்கு இதுவரை நடைபெற்று முடிந்த கலந்தாய்வுகளுக்குப் பிறகு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 264 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களும், 569 நிர்வாக ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன.’

இந்த இடங்களை நிரப்புவதற்கு இதுவரை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, புதிதாக 207 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 -ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியது:

பல் மருத்துவ இடங்களுக்கு புதிதாக விண்ணப்பித்தோர், ஏற்கெனவே விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்காதோர், கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்று அதனைக் கைவிட்டோர் என அனைரும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் பல் மருத்துவப் படிப்பில் மீதம் உள்ள இடங்களுக்கான ஒதுக்கீடு மட்டுமே நடைபெறும். மறுஒதுக்கீடு நடைபெறாது என்றார் அவர்.

கலந்தாய்வு விதிமுறைகள், அட்டவணை ஆகியவை www.tnhealth.org www. tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *