கடற்கரை – வேளச்சேரி இடையில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களை சுற்றி 30 கிலோ மீட்டருக்கு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையில் செயல்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது தினமும் 150 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரியையும் – பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையில் நான்காவது வழித்தடம் அமைக்கப்பட்ட பிறகுதான் பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயிலுடன் இணைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தார்.

இதைத் தவிர்த்து, பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள மந்தவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தபடவுள்ளது.

இந்த ரயில் நிலையங்கள் 4 முதல் 8 தளங்கள் கொண்ட ரயில் நிலையங்களாக தற்போது உள்ளது. இவற்றில் 20,44,400 ச.மீ அளவில் இடங்கள் உள்ளது. இந்த இடங்களில் வணிக வளாகங்கள், உணவங்கள், வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேற்கொள்ள சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில். சென்னை பறக்கும் ரயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,

”சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் 19 ரயில் நிலையங்கள் உள்ளது. இவற்றில் ஒரு சில ரயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. திருமயிலை போன்ற ஒரு சிலரயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் தான் அடிப்படை வசதிகள் போதிய அளவில் உள்ளது.

பெருங்குடி போன்ற ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, இவற்றை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளில் 30 கிலோ மீட்டர் தூரம் அளவுக்கு மேம்படுத்தப்படவுள்ளது.

இவற்றில் சாலை வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *