வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி இல்லாத காரணத்தினால், மின்சார பற்றாக்குறை காரணமாக அடிக்கடி தமிழகத்தில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்த பற்றாக்குறையை மத்திய அரசிடம் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழக அரசு பெற்று தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. இருப்பினும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, அனைவரும் சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது பரவி வருகிறது.
இந்நிலையில் முதல்கட்டமாக அரசு கட்டிடங்களில் சூர்ய சக்தி மின்சாரம் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சூரிய சக்தியில் மின் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முதல்அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013ஆம் ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார். முதல் கட்டமாக 10 ஆயிரம் வீடுகளுக்கு சூரிய மின்சக்தி மேற்கூரை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இந்த பணி மாநிலம் முழுவதும் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள், ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றிலும் சூரிய மின்சக்தி மேற்கூரை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
..
இந்நிலையில் கோயம்பேட்டில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை நிர்வாக அலுவலகம் மற்றும் ரெயில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலுக்கு தேவைப்படும் மின்சாரம் தற்போது மின்சார வாரியத்திடம் இருந்து ‘கிரிட்’ மூலம் பெறப்படுகிறது. மெட்ரோ ரெயில் நிறுவனம் மின்சாரத்திற்காக தான் அதிகம் செலவு செய்கிறது. இதனை குறைக்க சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக டெல்லியை சேர்ந்த ‘சு-காம்’ என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போது அந்த பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து ‘சு-–காம்’ நிறுவனத்தின் உதவி மேலாளர் எஸ்.வெங்கடேஷ் கண்ணா கூறியதாவது:
மெட்ரோ ரெயில் நிலையத்தின் தலைமை அலுவலகத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய, அதன் பணிமனையில் ரூ.8 கோடி மதிப்பில் சூரிய மின்சக்தி மேற்கூரை, 10 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் வரை சேமிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ENglish Summary: Chennai Metro Rail stations worth Rs 8 crore in the solar electric roof