சென்னையில் மிகவும் பரபரப்பான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி தி.நகர். சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்குள்ள நகைக்கடை, ஜவுளிக்கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அது மட்டுமின்றி சென்னை புறநகர் பகுதியில் இருந்து தி.நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அதிக அளவில் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதியாக தி.நகர் விளங்குகிறது.

சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் தியாகராய நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி தி.நகர் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு கூட்ட நெரிசலைதான் கடந்து தான் செல்ல வேண்டும். இந்த நெரிசலை குறைப்பதற்காக தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக மாம்பலம் ரெயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில் 1,968 அடி நீளம் கொண்ட நடை மேம்பாலம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டு வசதி கொண்ட இந்த ஆகாய நடை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் சென்று திறந்து வைக்கிறார். தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி மாவட்டச் செயலாளர் மயிலை வேலு, பகுதிச் செயலாளர் கே.ஏழுமலை, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *