metroசென்னையின் புதிய அடையாளமான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை சிறப்பாக இயங்கி வரும் நிலையில் தற்போது சின்னமலை – மீனம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் உயர்நிலைப் போக்குவரத்து வரும் ஜூன் மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை முதல் பாதையும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2-ஆவது பாதையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதில், ஆலந்தூர் – கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. மேலும், சென்னையின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சின்னமலை – மீனம்பாக்கம்: சின்னமலை – ஓடிஏ இடையிலான உயர்நிலைப் பாதையில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனை ஓட்டம் விரைவில் மீனம்பாக்கம் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படவுள்ளது. இப்போது இந்தப் பாதையில் 30 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரயில் பொறியாளர்கள் தண்டவாளம், மின் பாதையின் செயல்பாடு திருப்தியாக உள்ளனவா என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சோதனை ஓட்டத்தில் திருப்தி ஏற்படும் பட்சத்தில், ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்படும். இதையடுத்து, பாதுகாப்பு ஆணையர் இந்தப் பாதையில் ரயிலை இயக்கிப் பார்த்து, பொதுமக்கள் பயணம் செய்வதற்கான அனுமதியை அளிப்பார்.

சின்னமலை – மீனம்பாக்கம் விமான நிலையம் இடையே இந்தச் சோதனை ஓட்டம் மார்ச் மாதம் வரை நடைபெறும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவிக்கன்றனர். வரும் ஜூன் மாதத்தில் இருந்து கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை தற்போது இயக்கப்படும் ரயில்கள், ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் கோயம்பேடு – எழும்பூர் இடையிலான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை மாநகரின் அனைத்து சுரங்க வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் மந்தமாகியுள்ளதால் இந்த வழித்தடங்களின் சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டுதான் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

English Summary : CMBT – Alandur Metro Rail extension to St. Thomas Mount from june.