இந்தியன் வங்கியின் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுடன் எனக்கு இருந்த தொடர்பு என் வாழ்நாளின் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றி இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் மிகவும் வரவேற்புக்குரியது.

ஐயா அவர்கள் உயிரோடு இருக்கும்போதே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. அதில் ஐயா திரு கோபாலகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட இரு பாடல்களையும் இணைத்து வெளியிட்டிருந்தோம். அந்தப் பாடல்களோடு ஆவணப் படத்தைப் பார்த்து ஐயா அவர்கள் என்னைப் பாராட்டினார் என்பதைப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். ஆனால் அந்தப் பாடல்கள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெறவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திரு ஜெகத்ரட்சகன் அவர்கள் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களைப் பற்றி குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை நமது பாரத தேசம் முழுவதும் எத்தனையோ இடங்களில் எத்தனையோ பேர் நினைவுகூர்ந்து வருகிறார்களோ அந்த அளவுக்கு திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களையும் நினைவு கூர்ந்து வருகின்றனர்” என்று திரு ஜெகத்ரட்சகன் அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நமது ஐயா திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் “மனிதநேயம் மிக்கவர்” என இங்கே உரையாற்றிய பலரும் உயர்வாகக் குறிப்பிட்டனர். ஐயா திரு கோபாலகிருஷ்ணன் அவர்களைத் தவிர வேறு எவரும் இத்தகைய பாராட்டைப் பெற்றவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு புகழுக்கு உரியவர் நமது திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள். அவர் வாழும் காலத்திலேயே “மனிதநேய மாமனிதர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நம் ஐயா அவர்கள்.

கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுடைய குடும்பம் பாரம்பரியம் மிக்க மணியக்காரர் குடும்பமாகும். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய தந்தையார் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் தலைநகராக இருந்த சென்னை மாநகரின் முதல் மேயராகப் பணியாற்றியவர்.‌ அவருக்குப் பின்னால் சென்னை மேயராக வந்தவர்களுக்கெல்லாம் அவர் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்தார் . அதனால் அவர் “மேயர் மேக்கர்” என்றும் “கர்மவீரர்” காமராஜர் அவர்களால் “சென்னையின் தந்தை” எனவும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

“புலிக்குப் பிறந்தது பூனையாகுமா” “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்” என்பது பழமொழி. அந்த பழமொழிக்கு இணங்க தந்தையைப் போலவே இன்னும் சொல்லப்போனால் தந்தையையும் தாண்டி, சிறப்பான முறையில், ஏழை, எளிய மக்களுக்கு கடனுதவி அளித்து, அவர்கள் முன்னேற செயலாற்றியவர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள். ஐயா அவர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர் .சிறந்த ஆளுமைத் திறன் கொண்டவர்.

கடந்த1958 ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் சாதாரண அலுவலராகப் பணியைத் தொடங்கி, அந்த வங்கியில் பல்வேறு பதவிகளிலும் படிப்படியாக முன்னேறி ,அதன் தலைவராக உயர்ந்து சிறப்பாகச் செயல்பட்டவர் நமது ஐயா அவர்கள்.‌ இந்தியன் வங்கியின் தலைவராக ஏழு முறை பதவிநீட்டிப்பு பெற்ற பெருமைக்குரியவர் ஐயா திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள்.

“இந்தியன் வங்கி அது உங்களது வங்கி” என்று சொல்லுமளவிற்கு ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கடனுதவி அளித்து, அவர்களது வாழ்க்கையை முன்னேற்ற தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஐயா அவர்கள்.
இன்று வீட்டுவசதிக் கடன் பெறாதவர்களே இல்லை என்ற நிலையில் வீட்டுவசதிக் கடன் திட்டத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களையே சேரும். அதுமட்டுமன்றி வீட்டுவசதிக் கடன் உதவித் திட்டத்தை நாடெங்கும் செயல்படுத்த அடித்தளம் இட்டவர் ஐயா அவர்கள்தான் என்பது கூடுதல் செய்தியாகும். அதனால் “அனைவருக்கும் வீடு” என்று கனவு சாத்தியமானது. விவசாய கடனுதவி அட்டையை அறிமுகம் செய்துவரும் ஐயா அவர்கள்தான். அதன் அடிப்படையில்தான் “நபார்டு” வங்கி “கிசான் கிரெடிட் கார்டு” மூலம் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

மறைந்த பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு நாகேஷ் அவர்கள் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களைப் பற்றி கூறும்போது “வாழ்க என்றாலும் வாழ்வார், வீழ்க என்றாலும் வாழ்வார். எனவே எவராலும் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களை அசைக்க முடியாது” என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் திரைப்படங்களுக்கு மட்டுமே பாடல் எழுதுவார். தனிநபர்களைப் புகழ்ந்து அவர் பெரும்பாலும் பாடல் எழுதுவதில்லை. ஆனால் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களைப் பற்றி திரு வைரமுத்து அவர்கள் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் என்பது மேன்மைக்குரிய விஷயமாகும்.

சென்னையில் அமைந்துள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரைப் போற்றும் விதத்தில் அந்தப் பாடலை வைரமுத்து அவர்கள் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் சுமார் 45 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் கடனுதவி அளித்து பெரும் சாதனை படைத்தார். இந்தியன் வங்கியின் கடனுதவி இலக்கைவிட கூடுதலாக கடனுதவி அளித்து அனைத்துத் தரப்பினரும் முன்னேற உறுதுணையாகச் செயல்பட்டார்.

பாரத நாட்டின் அன்னியச் செலாவணி அதிகரிக்க பெரும் துணையாக பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டார். இதன்மூலம் 15 சதவீத அன்னியச் செலாவணி அதிகரிக்க அவருடைய அரும்பணி மிக முக்கியமானதாக அமைந்தது. இதற்காக 1994-ஆம் ஆண்டு அவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது.

சற்றேறக்குறைய 273 கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அவர் கடனுதவி வழங்கி இருக்கிறார். இதன்மூலம் கல்வியில் புரட்சி ஏற்பட உறுதுணையாக இருந்தார். முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவாஹர்லால் நேரு அவர்களின் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடி அவருக்குப் பெருமை சேர்த்தவர் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள். இதற்காக பிரத்தியேக ‘லோகோவை’ அறிமுகப்படுத்தியது முதன்முதலாக ஐயா திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் தான்.

“தேவைதான் கண்டுபிடிப்புகளுக்கு தாய்” (necessity is the mother of inventions) என்ற கருத்திற்கு ஏற்ப அனைத்து துறையிலும், பல்வேறு தரப்பினரும் சாதனை படைக்க, கடனுதவி அளித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஐயா அவர்கள் வித்திட்டார்.
பிரபல தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் குறிப்பிட்டது போல “அறிவு, பணம், எரு “இவை மூன்றும் ஒரே இடத்தில் தேங்கி இருக்கக் கூடாது. தேங்கி இருந்தால் வீணாகிவிடும். அனைத்து தரப்பினரையும் இம்மூன்றும் சென்றடைய வேண்டும். அப்போதுதான் அதன் பலன்கள் பாமர மக்களைச் சென்றடைய இயலும்” என்று குறிப்பிட்டார். அம்மையார் சிவசங்கரி அவர்கள் குறிப்பிட்டதைப் போல கலைத்துறை, கல்வித்துறை, தொழில்துறை, சிறு ,குறு தொழில்கள், வியாபாரம் என அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண ஐயா அவர்களுடைய கடனுதவியே மிக முக்கியக் காரணமாகும்.

இன்றைய தினம் திரைப்பட நடிகர் விஜய் பேசலாம். “பெட்டியில் பணத்தை கட்டுக்கட்டாகப் பூட்டி வைத்தால் யாருக்கு என்ன லாபம் என்று”? இதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த ஐயா திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கும் கடனுதவி அளித்து அவர்கள் வாழ்வை வளம் பெறச் செய்தார் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய விஷயமாகும். பல்வேறு மாணவ, மாணவிகள் இந்தியன் வங்கியில் கல்விக் கடனுதவி பெற்று, நன்கு உயர்கல்வி கற்று, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரும் பதவிகளில் அமர, அவர்களது வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் ஐயா அவர்கள்தான். இப்படி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பல்துறை வித்தகர் அவர். நமது ஐயாவுடன் நெருங்கிப் பழகி அவரோடு இணைந்து பணியாற்றிய சில பணிகளை கூறுகிறேன்.

“யாதவா சாம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ்” சார்பாக “ரஷ்ய கலாச்சார மையத்தில்” நடந்த நிகழ்ச்சியில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இது யாதவ சமுதாயத்திற்குப் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்ச்சியாகும்.

‘யாதவா சாம்பர்ஸ் ஆப் காமர்ஸ்’ சார்பாக பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டி சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள ‘காஸ்மாபாலிட்டன் கிளப்பில்’ நடந்த விழாவில் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து அவர்களுக்குப் பெருமை சேர்த்தார் ஐயா அவர்கள் .‌

இதேபோன்று வளரும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க சென்னை அம்பிகா ஓட்டலில் நடந்த ‘யாகூ’ நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி, பயிலரங்குக்கு ஏற்பாடு செய்தார். ‘கோ’ என்ற கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சென்னை கிண்டியில் உள்ள ‘லீ மெரிடியன் ஹோட்டலில்’ ஏற்பாடு செய்து இந்தியன் வங்கியைப் போன்று ‘யாதவா வங்கி’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தனது கனவை விதைத்தார். ஆண்டுதோறும் அவர் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக “ஆயர் பண்பாட்டு நாள்” என அறிவித்து, அன்றைய தினத்தில் ‘தொழுவம்’ மற்றும் ‘யாம் கூடுகை’ என்ற இரு லோகோவினை உருவாக்கினார்.

“யாதவ் 360 டிகிரி” “யாதவம் டாட் காம்” இவைகளையும் அறிமுகப்படுத்தினார். ஆயர் பண்பாட்டு மையத்தின் தொடர்ச்சியாக இந்து ஆன்மிக கண்காட்சிகள் ஆண்டுதோறும் இந்துக் கல்லூரியிலும் குருநானக் கல்லூரி யிலும்நடைபெற்று வருகின்றன.

ஆயர் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் “தமிழும் வைணவமும்” என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் கேரள கிருஷ்ண சமாஜம் சார்பாக கேகே நகரில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து போட்டி மற்றும் மாவீரன் அழகுமுத்துக்கோன் கபடிப் போட்டி, உலக சிலம்ப விளையாட்டுச் சங்கம் சார்பாக சிறந்த சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டையைக் கட்டியது யாதவர்கள்தான் என்பதற்கான வரலாற்றை ஆவணப்படுத்த திரு ரங்கபூபதி அவர்களோடு இணைந்து பணியாற்றுவோம். “தமிழர் பொருளாதார மாநாடுகளை” தொடர்ந்து நடத்தி வரும் டாக்டர் விஆர்எஸ் சம்பத் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். இந்தியன் வங்கியின் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் (பைபர்) தொடர்பிலும் இருப்போம்.

ஆயர் பண்பாட்டு மையம், சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள யாதவ சத்திரம், திருப்பாவை வைபவம் மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒப்புவித்தல், கூடாரவல்லி நிகழ்ச்சி, இடைக்காடர் ஜெயந்தி ஆகிய சிறப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற உறுதுணையாக இருப்போம் என்று இந்த நேரத்திலே தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

யாதவ மகாசபை பணிகளை ஐயா அவர்களின் வழியில் தொடர்ந்து செயல்படுத்த பலர் இருக்கையில் நாங்கள் மேற்கொண்ட செயல்களை ஐயா வழியில் தொடர்ந்து செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் புகழ் ஓங்குக!
யாதவர்கள் புகழ் ஓங்குக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *