கோடை வெயிலை சமாளிக்க கம்பங்கூழை 200 முதல் 250 மில்லி லிட்டர் தினமும் ஒரு வேளை அருந்தி வர உடலுக்கு நன்கு குளிர்ச்சியுண்டாகும்.

தேவையான பொருட்கள்:-

சுத்தம் செய்த கம்பு – 100 கிராம்,
சாதம் – கால் கப்,
தயிர் – அரை லிட்டர்,
தோலுரித்த சின்ன
வெங்காயம் – 20,
பச்சை மிளகாய் – 4,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
மாங்காய் துண்டுகள் – தேவையான அளவு.

செய்முறை:- கம்பங்கூழ் தயாரிக்க முதலில் கம்பை தூசி, கற்கள் இல்லாமல் நன்கு சுத்தம் செய்து அரைமணி நேரம் சுத்தமான நீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் நீரை வடித்து 15 நிமிடங்கள் நிழலில் காய வைக்க வேண்டும். அதன்பின்னர் ஆட்டுக்கல் அல்லது மிக்சியில் போட்டு ரவை பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். குக்கரில் அரைத்த கம்புடன் சாதம், அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கட்டி பிடிக்காதபடி கிளறி அரை மணி நேரம் தீயில் வேகவைத்து கூழ் பதத்தில் எடுக்க வேண்டும் நன்கு ஆறிய கம்பு கூழுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், தயிர், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். மாங்காய்த் துண்டுகளை தொட்டுக் கொண்டு இந்த கூழை குடிக்கலாம். மண் சட்டியில் ஊற்றி வைத்து பருகினால் இன்னும் சுவை கூடும்.

கம்பை வளரும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். நன்கு வறுத்து பொடித்து சலித்து அத்துடன் நாட்டுச்சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் சத்துப்பிடித்து வளர்வதோடு சதைப்பற்றும் அதிகரிக்கும். பலன்கள்: உடலை குளிர்ச்சியாக்கும். உடலுக்கு தேவையான சக்தியை தரவல்லது.

கோடைகாலம் தொடங்கி விட்டது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், பதனீர், மோர் பல வகையான கூழ்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை உட்கொள்வதே நலம். இவற்றை அருந்துவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைப்பதுடன் குடலின் நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இவைகள் உடலில் எளிதில் செரிமானத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு பல வகையில் நமக்கு நன்மை விளைவிக்கும் இயற்கை உணவான கம்பங்கூழை அருந்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *