தமிழர்களாகிய நாம் வெப்ப மண்டல பகுதியில் வாழ்கிறோம். நமக்கு என்று, நம் பாரம்பரிய மரபு வழி மாற்றுப்பானங்கள் நம் முன்னோர் வைத்துள்ளனர். ஆம்.. இளநீர், மோர், எலுமிச்சை சாறு இன்னும் அதிகமாக நம் பாரம்பரிய குளிர்பானங்கள் உள்ளன. இயற்கை நமது உடலை குளிர்வித்து அதன் மூலம் பல வியாதிகளை தீர்க்கும் அற்புத பானமாக இளநீரை படைத்திருக்கிறது. கிராமப்புறங்களில் சர்வசாதாரணமாக கிடைக்கும் இளநீர், தற்போது நகர்புறங்களில் கிடைக்கிறது. கலப்படம் செய்ய முடியாத ஒரு குளிர்பானம் என்றால் அது இளநீர் தான்.

தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்சினையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடல் சூடு தணிக்கப்படுகிறது. இனிமையான இரவு தூக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பு அதிகம் இல்லாமல், இதய துடிப்பை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

தினமும் இளநீரை குடித்து வந்தால், உடலில் எந்த நோயும் வராது. உடல் குளிர்ச்சியாக இருக்கும். வெளிநாட்டு குளிர்பான பாட்டில்களை நான்கு பேருக்கு மத்தியில் திறந்து குடிப்பதையும், குளிர்பான பாட்டில்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பதையும் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் பாரம்பரிய குளிர்பானங்களை விற்பனை செய்யும் நன்னாரி சர்பத் விற்பனையாளர், இளநீர் விற்பனையாளர்களை இளக்காரமாக நினைக்கிறோம்.

இளநீர் குடிப்பதை இன்றைய தலைமுறையினர் விரும்புவது இல்லை, இயற்கை கொடுத்த அற்புத இளநீர் என்னும் பானத்தை நமக்காக விற்பனை செய்பவர்கள் செல்வந்தர்கள் அல்ல. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு மரபு சார்ந்த இளநீரை விற்பனை செய்யும் அவர்களுக்கு நாம் கைகொடுத்து உதவ வேண்டாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *